Tuesday, July 28, 2015

இனிக்கும் தமிழ் - 46 காளமேகம் சிலேடைப் பாடல்கள் - 16



கீரைப் பாத்தியும், குதிரையும்

கட்டி யடிக்கையாங் கான்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியா குமே.


 கீரை விதை தெளிக்கும்போது பாத்தியிலுள்ள மண்ணாலகட்டிகள் அடித்து உடைக்கப்படும். வாய்க்காலில் மடை மாறித் தண்ணீர் பாயும். பாயும் மடையின் கரை வெட்டி மறிக்கப்படும். மேன்மை அதற்கு உண்டு. பாத்தியின் எல்லையில் நீர் முட்டியபின் மடை திருப்பிவிடப்படும்.

குதிரையானது வண்டியில் கட்டி அடிக்கப்படும். முன்னங்கால் பின்னங்கால் என்று கால் மாறிப் பாயும். காலைத் தரையில் வெட்டிக் காட்டித் தன் மேன்மையைக் குதிரை விளக்கும். தடை வரும்போது திரும்பி ஓடும்.

Tuesday, July 14, 2015

இனிக்கும் தமிழ் -45 காளமேகம் சிலேடைப் பாடல்கள் 13



கண்ணாடியும், அரசனும்

யாவருக்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள் ளாக்கியேற் றரசத்தால்
சதிருறலா லாடிய ரசாம்


கண்ணாடி – எவருக்கும் வஞ்சனை செய்யாது. எல்லாரையும் அவரவராய் அவரவரது பாவனையைக் காட்டும். தன் முகத்தில் உள்ள தீங்கைப் பார்த்து அகற்றிக்கொள்ள எல்லாரும் கண்ணாடி பார்ப்பர். எதிரில் உள்ளவரைத் தன் உள்ளுக்குள் காட்டும். பின்புறம் ‘ரசம்’ பூசப்பட்டிருக்கும். சதுரமாகவும் இருக்கும்


அரசன் - ஓரவஞ்சனை செய்யாமல் எல்லாரையும் தன்னை ஒத்தவராய்ப் பாவித்து அவரது தீது அகலும்படி பார்த்துக்கொள்வான். எதிரியைத் தன் ஆட்சிக்குள் அடக்கி ஏற்றுக்கொண்டு சுவைப்பான். நால்வகையான சதுரப்படைகளை உடையவன்.

Tuesday, June 23, 2015

இனிக்கும் தமிழ் - 44 காளமேகம் சிலேடைப் பாடல்கள் 15




குதிரையும், காவிரியாறும்

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்
தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்
ஆடுபரி காவிரி யாமே.

குதிரை – ஓடும். நல்ல குதிரைக்கு அடையாளமான ‘சுழி’ சுத்தம் உண்டாகியிருக்கும். பகைவரை விரட்டியடிக்கும். தன்னை வளர்ப்பவனிடம் அன்பால் தலை சாய்க்கும்.

காவிரி ஆறு -நீராய் ஓடும். நீர்ச்சுழி இருக்கும். நீர் சுத்தம் ஆகும். (தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும். மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன் அதன்மீது தலைசாய்ப்பர்.

Wednesday, June 17, 2015

இனிக்கும் தமிழ் - 43 காளமேகம் சிலேடைப் பாடல் - 14




கண்ணாடியும்,  அரசனும்

யாவருக்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள் ளாக்கியேற் றரசத்தால்
சதிருறலா லாடிய ரசாம்


கண்ணாடி – எவருக்கும் வஞ்சனை செய்யாது. எல்லாரையும் அவரவராய் அவரவரது பாவனையைக் காட்டும். தன் முகத்தில் உள்ள தீங்கைப் பார்த்து அகற்றிக்கொள்ள எல்லாரும் கண்ணாடி பார்ப்பர். எதிரில் உள்ளவரைத் தன் உள்ளுக்குள் காட்டும். பின்புறம் ‘ரசம்’ பூசப்பட்டிருக்கும். சதுரமாகவும் இருக்கும்.

அரசன் - ஓரவஞ்சனை செய்யாமல் எல்லாரையும் தன்னை ஒத்தவராய்ப் பாவித்து அவரது தீது அகலும்படி பார்த்துக்கொள்வான். எதிரியைத் தன் ஆட்சிக்குள் அடக்கி ஏற்றுக்கொண்டு சுவைப்பான். நால்வகையான சதுரப்படைகளை உடையவன்.

Monday, June 15, 2015

இனிக்கும் தமிழ் -42 காளமேகம் சிலேடைப் பாடல்கள்.- 12



வெற்றிலையும்...விலைமகளும்

கொள்ளுகையா னரிற் குளிக்கையான் மேலேறிக்
கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் – தெள்ளுபுகழ்ச்
செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில்
வெற்றிலையும் வேசையாமே.

வெற்றிலை – விற்போர் கையால் கொள்ளும் நீரால் குளிப்பாட்டப்படும். கொடிக்காலில் மேலே ஏறி வெற்றிலையைக் கிள்ளுவர். கவுளி கவுளியாக அடுக்கிக் கட்டி வைக்கப்படும்.

 விலைமகள் – வேசை கையால் தழுவிக்கொள்ளப்படுவாள். குளித்துவிட்டு உலாத்துவாள். அவன் மேல் ஏறிக்கொண்டு அவள் அழகு மேனியை ஆசையாகக் கிள்ளுவர்.

Sunday, June 14, 2015

இனிக்கும் தமிழ் - 41 காளமேகம் சிலேடைப் பாடல்கள்-11




பனைமரமும், விலைமகளும்


கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்
எட்டின்பன் னாடை யிழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும்
வேசையென லாமேவி ரைந்து. 

பனைமரம் – பனைமரத்தில் ஏறுவோர் அதனைக் கட்டித் தழுவிக்கொண்டும் காலைச் சேர்த்து வைத்துக்கொண்டும் ஏறுவர். எட்டி அதன் பன்னாடையை இழுத்து எறிவர். முட்டிக்கொண்டு தன் ஆசை வாயால் அதன் கள்ளை அருந்துவர்.

விலைமகள் - விலைமகளை  (அவளிடம் வருவோர்) கட்டித் தழுவுவர். காலைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள்மீது ஏறுவர். எட்டிப் பிடித்து அவளது பன்னாடையை (மடித்துக் கட்டிய ஆடையை) இழுத்து அவிழ்ப்பர். முட்டிக்கொண்டு அவளது ஆசைகாட்டும் வாயிலுள்ள எச்சில் கள்ளை அருந்துவர்.

Monday, June 8, 2015

இனிக்கும் தமிழ் - 40 காளமேகம் சிலேடைப் பாடல்-10




மீனும் பேனும்

மன்னீரிலே பிறக்கும மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே.


மீனானது நிலைபெற்ற நீரிலே பிறக்கும். மற்று அதன் நீரலையிலே மேயும். திரும்பும் பின்-நீச்சலில் குத்தும்.

பேனானது நிலைத்திருக்கும் ஈரிலே பிறக்கும். மன்னித் தலையிலே மேயும். பின்னி எடுத்து ஈச்சு என்னும் ஈர்கொல்லியில் குத்தப்படும். இவை இரண்டிற்கும் பெருமை.

Friday, June 5, 2015

இனிக்கும் தமிழ் -39 காளமேகம் சிலேடைப் பாடல்கள்- 9



நாயும் தேங்காயும்

ஓடுமிருக்கும் அதனுள்வாய் வெளுத்தி ருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு .


நாயானது ஓடும். இருக்கும்.. அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். நம்மை நாடி வரும். வாலைக் குழைத்து வருவதற்கு வெட்கப்படாது.

தேங்காயில் ஓடும் இருக்கும். தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்து கொடுக்காது.

Thursday, June 4, 2015

இனிக்கும் தமிழ்- 38 காளமேகம் சிலேடைப் பாடல்கள் - 8



சந்திரனும் மலையும்

நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலாற் சென்று – தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து


சந்திரன் நிலாவாக விளங்குகிறது. நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது. தலைக்கு மேல் தோன்றி வருகிறது.

மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு அடுக்ககுகளோடு காடப்படுகிறது. நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது. சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம். நம் மேல் உயரமாகத் தோன்றுகிறது.

Wednesday, June 3, 2015

இனிக்கும் தமிழ் -37 காளமேகம் சிலேடைப் பாடல்கள்-7



முகுந்தனும் முறமும்

வல்லரியாய் உற்றிடலான் மாதர்கையில் பற்றிடலான்
சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதலால் – வல்லோர்
அகந்தனிலே வாழ்தலா லன்றுல களந்த
முகுந்தனுமே யகும் முறம்..


உலகளந்த பெருமாளாகிய முகுந்தன் வலிமை மிக்க சிங்கமாகத் தோன்றினான். குழந்தை கண்ணனாக மாதர் கையில் பிடிபட்டான். சொல்வதற்கு அரிய பெருமை மிக்க மா என்னும் திருமகள் தன் நெஞ்சில் புடைத்திருக்கத் தோன்றுகிறான். நெஞ்சுரம் மிக்கவர் செஞ்சகத்தில் வாழ்கிறான்.

முறம் வலிமை மிக்க மூங்கில் என்னும் அரியால் பின்னப்பட்டது. மகளிர் புடைப்பதற்காகக் கையில் பற்றுகின்றனர். சொல் என்னும் நெல்லு மாவைப் புடைப்பதற்காகத் தோன்றி வந்துள்ளது. வலிமை மிக்கார் வீடுகளில் வாழ்கிறது.

இனிக்கும் தமிழ்-36 காளமேகம் சிலேடைப் பாடல்கள்- 6


பாம்பும் எலுமிச்சம்பழமும்

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்


பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது

எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.

Sunday, May 31, 2015

இனிக்கும் தமிழ் -35 காளமேகத்தின் சிலேடைப் பாடல்-5



பாம்பும் எள்ளும்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது


பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும். படமெடுத்து ஆடும்போதே 'உச்' என்று இரையும். பாம்பாட்டி பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும். ஓடிப்போய் மண்ணால் செய்த மண்டை ஓட்டில் சுருண்டு படுத்துக்கொண்டு பரபர என ஒலி வருமாறு அசையும். பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கு உண்டு.

எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும். செக்கில் ஆட்டப்படும்போது செக்கின் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும். நம் தலை மண்டைக்குள் ஓடிப் பரபர என்று தேய்க்கப்படும். பார்க்கப்போனால் அதற்குப் பிண்ணாக்கு உண்டு.

Friday, May 29, 2015

இனிக்கும் தமிழ்-34 காளமேகம் சிலேடைப் பாடல்கள்-4



பாம்பும் வாழைப்பழமும்

நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

பாம்பிடம் நஞ்சு இருக்கும். பாம்பு தன் தோலை உரிக்கும். சிவபெருமான் முடிமேல் இருக்கும். கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது.

வாழைப்பழம் நைந்துபோயிருக்கும். வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். கொடிய பசியோடு இருக்கும் ஒருவர் பல்லில் பட்டால் அப் பழம் மீண்டுவராது

Thursday, May 28, 2015

இனிக்கும் தமிழ்-33 காளமேகத்தின் சிலேடைப் பாடல்-3




வைக்கோலும் யானையும்

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம்.


வைக்கோல்
வாரிக் கள‌த்தடிக்கும் – அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் – அது பின் கோட்டைக்குள்ளே (ப‌ண்ட‌க‌ சாலை, Godown, Warehouse) சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் – பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்

மதயானை
வாரிக் கள‌த்தடிக்கும் – பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் – பின்னே பகையரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – இவ்வாறாக போர்க்களத்தில் சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்

(வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும். வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்.
யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.)

Wednesday, May 27, 2015

இனிக்கும் தமிழ்- 32 காளமேகம் சிலேடைப் பாடல் 2



ஆமணக்கு, யானை இரண்டையும் குறிக்கும் பாடல் இதோ-



முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை யாம்.

ஆமணக்கு, எண்ணெய் ஆட்டுதற்குரிய முத்துகளை உடையதாய் இருக்கும். காற்றில் அது தன் சிறிய கொம்புகளை அசைக்கும். தடித்த தண்டுகளையுடைய கிளைகளை ஏந்தி வளரும். முத்திருக்கும் காய்களைக் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்.
மால் யானையின் விளைந்த தந்தத்தின் முத்திருக்கும் என்பார்கள். அது அல்லாமமல் தந்தத்தின் அடிப்பாகத்தில் முத்துக்களால் ஆன மாலையை அழகுக்காகவும் கௌரவத்திற்காகவும் சுற்றிக் கட்டியிருப்பார்கள். அந்தத் தந்தத்தின் துணை கொண்டு பெரிய மரங்களைத் தூக்கிவரும் கொம்பசைக்கும். அந்தத் தந்தங்களை இங்கும் அங்குமாய் அசைத்த்படி ஆடிக்கொண்டே நிற்கும். நிமிர்ந்து நிற்கும் வாழைமரத்தின் பழுத்த குலைகளைச் சாய்த்து வீழ்த்திச் சாப்பிடும்.( இவ்வாறு, தேன் பொழியும் சோலைத் திருமலை ராயன் மலையில் ஆமணக்கும் யானை ஆகும்.)

Tuesday, May 26, 2015

இனிக்கும் தமிழ் -31

சிலேடைப் புலவர் காளமேகம், தென்னை மரத்தையும் ஒரு கணிகை எனக் கொள்ளலாம் என்கிறார் இப்பாடல் மூலம்.

என்ன ஒரு கற்பனை...பாருங்கள்

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்
கூறும் கணிகையென்றே கொள்.

பாரத் தலைவிரிக்கும் - தென்னை மரத்தின் ஓலைகள் எல்லாப் பக்கங்களும்
நீண்டு, விரிந்து இருக்கும். (கணிகைப் பெண்ணும் கூந்தலை விர்த்துத்
தொங்கவிட்டு அலங்காரம் செய்திருப்பாள்.) பன்னாடை மேல் சுற்றும் -
தென்னையில் பன்னாடை சுற்றிக் கொண்டிருக்கும். (அவளும் பலவண்ண ஆடைகளை
அணிந்திருப்பாள்.) சோர இளநீர் சுமந்திருக்கும் - தென்னோலைகளுக்குள்
மறைந்து இளநீர்க் குலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். (கணிகையும் இடைதளரும்
வகையில் இளநீர்போன்ற கொங்கைகளைச் சுமந்துகொண்டிருப்பாள்). ஏறி இறங்கவே
இன்பமாம் - தென்னையில் ஏறி இளநீர் பருகி இறங்குவது மிகவும் இன்பமாக
இருக்கும். (கணிகையும் அப்படித்தான்.) ( அதனால் தென்னை மரத்தையும் கணிகைப்
பெண்ணென்று கொள்ளலாம் என்பது பாடலின் பொருள்.)

Sunday, May 10, 2015

இனிக்கும் தமிழ் - 30

பேசுவது எளிது.அதையே உரைநடையாய் எழுதுவது அரிது.அந்த உரைநடையை இசையுடன் கூடிய கவிதையாக ஆக்குவது என்பது அதனெனினும் அரிது.பாமரர்களுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதுபவரே மக்கள் கவிஞர் எனப் போற்றப்படுபவர்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கவிஞர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்..தமிழகத்தில் பிறந்து..வளர்ந்த அருணாசலக் கவிராயர் ஆவார்.இவர் தன் வாழ்நாள் முழுதும் கம்ப ராமாயணம் படித்தும்,பாடியும்,சொற்பொழிவு ஆற்றியும் வந்தவர்.இவரது ராம நாடகத்தில் சூர்ப்பணகையின் காமவெறியை நகைச்சுவைக் கலந்துக் கூறுகிறார்.அதைப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் காதலுணர்வின் சிறப்பினைச் சீதையின் வாயிலாகவும்..காமவெறியின் இழிவினை சூர்ப்பணகையின் வாயிலாகவும் புலப்படுத்தியுள்ளார்.அவற்றையே காண்போர் சுவைக்க நாடகமாக்கினார் கவிராயர்.

ராமனின் அழகில் மயங்கி..பேரழகான வடிவொடு ராமர் முன் வருகிறாள் சூர்ப்பணகை.ராமர் மசியவில்லை.சரி..இளையோனையாவது மயக்கலாம் என லட்சுமணனிடம் வருகிறாள்.அவளை அறநெறியில் அகற்ற முடியா லட்சுமணன் மறநெறியைக் கையாண்டு அவளது மூக்கை அறுத்து துரத்துகின்றான்.மூக்கறுப்பட்டும்..காமம் அழியாமல் மீண்டும் ராமனிடம் வருகிறாள் சூர்ப்பணகை.அவனிடம் சொல்கிறாள்...

'உங்கள் தந்திரத்தை நான் தெரிந்துக் கொண்டேன்..கட்டழகுக் கன்னியான என்னை..வேறு எவரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவும்..மற்றவர் கண்ணேறு என் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும்..என் பேரழகை சற்றுக் குறைக்க தம்பியிடம் சொல்லி என் மூக்கை அரியச் செய்தீர்கள்.நீங்கள் என்னை விரும்புவது எனக்குத் தெரிகிறது.உங்கள் இளையக் காதலியான நான் மூத்தவளைவிட அழகானவள்.அதனால் சீதைக்குக் கோபம் வரும் என்பதால்..அவளது வாயை அடக்க நீர் செய்த தந்திரம் என் மூக்கை அறுத்தது..மேலும் சீதைக்கு இடை மிகவும் சிறியது.அந்த குறை என்னிடம் இல்லை.அதனால் எனக்கும் ஒரு சிறு குறையை உண்டாக்கி..இருவரையும் சரிநிகர் சமானம் ஆக்கிவிட்டீர்கள்.சீதையைப்போல் இடைக் குறையை எனக்கு உண்டாக்க முடியாது.இடையைக் குறைப்பதை விட மூக்கைக் குறைப்பது எளிது என இக்காரியம் செய்து விட்டீர்.இதன் மூலம் நீங்கள் என் மீது கொண்டுள்ள காதல் புரிகிறது.' என காதற்சுவை சொட்டச் சொட்டக் காமவெறியுடன் சொல்கிறாள் சூர்ப்பணகை.

என் உருவினில் கொஞ்கம் கொய்தீர்
எனக்கென்ன தாழ்ச்சி நீர் செய்தீர்?

அன்னியளாக என்னைப் பிரிய விடாமல்- என்
அழகு கண்டொருவர் கண்ணேறு படாமல்
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்

இடுப்பு சீதைக்குக் கொஞ்சம்
மூக்கிவ ளுக்குக் கொஞ்சம்
என்றெவர்க்கும் சரிக் கட்டவோ - எண்ணி
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்..

- கவிராயரின் ராம நாடகம்

என்கிறாள் இன்மொழியுடன் சூர்ப்பணகை.சூர்ப்பணகையின் காமவெறியாகிய காதற்போலியை நகைச்சுவைக் கலந்து நாடகமாக்கினார் கவிராயர்.

அடுத்த பதிவில் சீதையின் காதலுணர்வை எப்படிக் காட்டியுள்ளார் எனப் பார்ப்போம்.

Monday, May 4, 2015

இனிக்கும் தமிழ் -29



நம் பெரியவர்கள் நல்லொழுக்கத்துடன் இரு என அறிவுரை சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

திருவள்ளுவரும் ஒழுக்கம் உடைமை என்ற பெயரில் ஒரு அதிகாரமே வைத்துள்ளார்.அதில் ஒரு குறளில், உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் என்கிறார்.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

ஆமாம்...இந்த ஒழுக்கம் என்பது என்ன? அதிலும் வகைகள் இருக்கிறதா..நல்ல ஒழுக்கத்துடன் திகழ தேவையாவவை என்ன...இது பற்றி ஆசாரக் கோவை சொல்வதென்ன...பார்ப்போம்


நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
      டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ
      டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை
      நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
      சொல்லிய ஆசார வித்து

 தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமையும்,  பொறுமையும்,  இன்சொல்லும்,  எல்லா உயிர்க்கும்  துன்பந்தருபவற்றை  செய்யாதிருத்தலும், கல்வியும், பிறருக்கு உதவிடம் இனிய வழக்கமும், மிக,  அறிதலும், அறிவு உடைமையும்,  நல்ல இயல்புள்ளவர்களுடன், நட்புச் செய்தலும்,  என்ற இவ்வெட்டு வகையும்,  அறிஞர்களாற் சொல்லப்பட்ட,  ஒழுக்கங்கட்குக் காரணங்களாகும்.

Monday, April 27, 2015

இனிக்கும் தமிழ் -28



மேன்மக்கள் விரும்பாத சொற்களைக் கூறமாட்டார்கள்.எந்த ஒரு துயரம் வந்தாலும் தன் நிலை மாறாதிருப்பர்.புறங்கூற மாட்டார்கள்.இதைத்தான், "கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பார் மூதுரையில் ஔவையார்.

பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அது தன் சுவையில் குன்றாது.அதுபோல எவ்வளவு துன்பங்களில் இருந்தாலும் நற்பண்புகள் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவே இருப்பர்.அது எப்படிப்பட்டது என்றால் வெண்மை நிறத்தில் உள்ள சங்கு தீயில் எவ்வளவு சுட்டாலும் வெண்மையாகவே இருக்கும் அதுபோல., என்கிறார்.


என்னவொரு அழகான உவமை

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

( நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்
நண்பர்களாக மாட்டார்கள்.  நம் நிலை தாழ்ந்தாலும்
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு
எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது.
தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்
போன்றது அவர் நட்பு.)

இதையே வள்ளுவர் எப்படி சொல்கிறார்..தெரியுமா?

சாதரணமாக ஒரு பயிரைக் கண்டதுமே அந்து எப்பேர்ப்பட்ட நிலத்தில் விளைந்தது என்பதை ஒரு விவசாயி கூறிவிடுவான்.அதுபோல ஒருவர் பேசுவதை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்திட முடியும் என்கிறார்.

இதை வைத்துதான், ஒருவன் செயல் வீரனா அல்லது வாய்ச்சொல் வீரனா என்பதையும் சொல்லி விடலாம்.



நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்



(விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என்பதி கண்டுபிடித்து விடலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச்சொல்லை வைத்தே அவர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தவர் என்பதி உணரலாம்)

Tuesday, April 14, 2015

இனிக்கும் தமிழ்-27



சாதாரணமாக நம் வீட்டுப் பெரியவர்கள் காகம் கரைந்தால்...இன்று யாரோ விருந்தினர் வருவார்கள்..என்று சொல்வதைக் கேட்கிறோம்.

இந்த நம்பிக்கை அப்போதே...சங்க காலங்களிலேயே இருந்திருக்கிறது.

குறுந்தொகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முல்லை திணை பாடலில் அதைச் சொல்கிறார் பாடலாசிரியர் நச்செள்ளையார்.

தலைவன், தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான்.தலைவி அவனது வரவை எதிர்பார்த்திருக்கிறாள்.அப்போது காகம் கரையும் போதெல்லாம்..."பார்த்தாயா..இன்று உன் தலைவன் வந்துவிடுவான் என்று கூறி தலைவியைத் தோழி சமாதானப் படுத்துகிறாள்.

தலைவன் திரும்ப வந்து, தான் வராத நேரத்தில், தலைவியை ஆறுதல் கூறித் தேற்றியதற்காக தோழியைப் பாராட்டுகிறான்.தோழியோ, நான் பெரியதாக ஏதும் செய்யவில்லை.அச்செயலைச் செய்தது காகம் தான்.அது கரையும் போதெல்லாம் "நீர் வருவீர்" என்று மட்டுமே ஆறுதல் கூறினேன் என்கிறாள்.

இனி பாடல்-

தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)


 
திண்டேர் நள்ளி கானத் தண்டர்
 
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
 
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
 
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி

பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
 
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.


                                -காக்கை பாடினியார் , நச்செள்ளையார்.


 திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது,  காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு,  தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றும் ஒருங்கே விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை,  ஏழு பாத்திரங்களில்ஏந்திக் கொடுத்தாலும்,  என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு,  விருந்தினர் வரும்படி,  கரைதலைச் செய்த காக்கைக்கு இட்ட உணவே, சிறந்தது ஆகும்
 

    (கருத்து) காக்கை கரைதலால் நீர் வருவீர் என தலைவியை ஆற்றுவித்தேன்.

Tuesday, April 7, 2015

இனிக்கும் தமிழ் -26



பணம் வாழ்வில் முக்கியமில்லை குணம் தான் முக்கியம் என்றெல்லாம் நாம் சொன்னாலும்..நம்மிடம் செல்வம் இல்லையெனில் மற்றவர்களால் சற்று இகழ்ச்சியுடனேயே பார்க்கப் படுகிறோம் என்பதே நடைமுறை உண்மை.

செல்வத்தின் சிறப்பை நன்கு உணர்ந்தவர் திருவள்ளுவர்..அருளும் பொருளும் மனிதனின் இன்றியமையாதத் தேவைகள்.ஆயின்..இவை இரண்டிடிலும் பொருளின் அவசியத்தை மறக்கமுடியாது...மறுக்கவும் முடியாது..பொருளில்லாமல் இவ்வுலகில் இன்பமாக வாழ முடியாது என்பது உண்மை..ஆனால் வள்ளுவனோ..மேலும் ஒரு படி அதிகம் சென்று..

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு - என்கிறார்

பொருளின் பெருமை இது..அருள் என்பது அன்பின் வழித்தோன்றலாகும்..தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்று அன்பு எனப்படும்..தொடர்பில்லாதவரிடம் கொள்ளும் பற்று அருள் ஆகும்.இவை இரண்டும் உலக மாந்தர்க்கு வேண்டிய பண்புகள்..ஆனால் அன்பும்..அருளும் உடையவரிடத்து பொருள் இல்லையேல் என்ன பயன்?

அதே போல் பொருளுடையவரிடம், அன்பும்..அருளும் இருப்பின் அது சுற்றத்தாருக்கும்...பிறருக்கும் பயன்படும்..

பொருளின் சிறப்பை மற்றுமொரு இடத்தில் சொல்கிறார்....

அன்பு என்பது ஒரு நல்ல தாயைப் போல..அந்தத் தாயின் குழந்தையே அருள் ..அந்த அருள் குழந்தையை வளர்க்க ஒரு செவிலித்தாய் வேண்டும்..அவள் வறுமை மிக்கவளாய் இருந்தால்..குழந்தை எப்படி நன்கு வளரும்..ஆகவே அப்படிப்பட்ட செவிலித்தாய் செல்வம் மிக்கவளாய் இருக்க வேண்டும்..

அன்பு என்னும் தாய்ப் பெற்ற அருள் என்னும் குழந்தை வளர பொருள் என்னும் செவிலித்தாய் வேண்டும்.. அப்போதுதான் அது ஓங்கி வளர்ந்து புகழ்ப் பெற்று வாழும்..இந்த உலக வாழ்க்கையின் உண்மையையே

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

என்கிறார் வள்ளுவர்.

Thursday, April 2, 2015

இனிக்கும் தமிழ்-25



கவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.

அத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.

அவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..

அத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..

ஆயின் என்ன விந்தை? உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன? இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.

பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன
பக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..
உச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை
உயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..
(மலரும் மாலையும்)

அடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகோ ளவே
பண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்
பக்குவம் ஏதடியோ
(மலரும் மாலையும்

Wednesday, April 1, 2015

இனிக்கும் தமிழ் -24



கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.

சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.

முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே

என்கிறார்.

அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.

Tuesday, March 31, 2015

இனிக்கும் தமிழ்-23



காளமேகம் பிற்காலப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

Thursday, March 26, 2015

இனிக்கும் தமிழ்-22



உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர்.

உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், 'தெரிவிக்க விரும்பும் பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு 'போல' போன்ற இணைப்புச் சொற்களால் ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர்.

ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்...

பாரதிதாசன் 'குடும்ப விளக்கில்' குழந்தையின் புருவத்தை இப்படிச் சொல்கிறார்..

"எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்'

எறும்புகளின் வரிசையை அரும்பிவிட்ட புருவத்திற்கு உவமைப்படுத்தியுள்ளார்.

புலவர் நா.காமராசன் முதுமை பற்றி கூறுகையில்.

"தண்ணீரில் இருக்கும் மீனைத்தேடி
தூண்டில் வந்தது போல்..
என்னைத் தேடி
முதுமை வந்தது"   என்கிறார்.

அதே போன்று அவர்...

'ரோஜாவையும், மல்லிகையையும்
ஒரே நேரத்தில்
கூந்தலில் வைத்துக் கொள்ளும்
பெண் சிறுமி போல
சூரியனையும் சந்திரனையும்
விடியலின் மெல்லிய வெளிச்சத்தில்
சூடிக் கொண்டிருக்கும் வானம்'     என்கிறார்.

ரோஜாவையும்,மல்லிகையையும், சிறுமியையும் முறையே சூரியன், சந்திரன்,வானத்திற்கு ஒப்பிடுகிறார்.

மு.மேத்தா...'சரியாடி பராசக்தி' என்னும் கவிதையில்..

"தண்ணீர்க் குடம்போல்
தனித்துக் காட்சி தரும்
சின்னஞ்சிறிய சிங்களத்தில் தமிழர்களின்
கண்ணீர்க் குடமன்றோ
கவிழ்க்கப்பட்டு விட்டது'   என்கிறார்

தண்ணீர்க்குடம் தனியாகக் கிடப்பது போல சிங்களம் தனியாக நாற்புறமும் நீரினில் அமைந்துள்ளது என்றும் தமிழர்கள் கண்ணீரில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வைரமுத்து..ஏ.இரண்டாயிரமே என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் அன்னம் என்ற சொல் நெல்லிற்கும்..பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அன்னப் பறவையையும் குறிக்கிறது.அன்னப் பறவை காணாமல் போனதுபோல் காவிரி ஆறும் காணாமல் போகிவிடுமா? என்கிறார்.இக்கவிதை உவமையால் பொருளை வெளிக் கொணர்கிறது எனலாம்.

Tuesday, March 24, 2015

இனிக்கும் தமிழ்-21




நிலவை பெண்களுக்கு ஒப்பிட்டு எவ்வளவு கவிதைகள்...

வள்ளுவனும் அதற்கு விலக்கல்ல.

மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாது விண்மீன்கள் தவிக்கின்றனவாம்

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி பொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட இந்த மங்கை நல்லாள் முகத்தில் இல்லையாம்

முழு நிலவே..என் காதலுக்கு உரியவளாக நீயும் ஆக வேண்டுமாயின்..என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக

நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் நீ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமானால் (அதில் நீ தோல்வியுறாமல் இருக்க) பலரும் கானும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

(இன்பத்துப்பால்..குறள்கள்..1116,1117,1118,1119)

இப்போதைய கவி ஒருவன்...தன் காதலி இளமையானவள் என்பதை இப்படிச் சொல்கிறான் நிலவை அழைத்து...

'என் அருமைக் காதலிக்கு..நீ இளையவளா..அல்ல மூத்தவளா.." என.

மற்றவனோ..நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றும், நிலவே என்னிடம் நெருங்காதே என்கிறான்.

இன்னொருவன்..நிலவைப் பெண்ணாகவும்..அப்பெண் பார்க்கும் கண்ணாடியாக நீல வானத்தையும் கூறுகிறான்.

பிறை நிலவை பெண்ணின் நெற்றிக்கு ஒப்பிட்டு  கவிகள் 'பிறை நுதல்' என்கின்றனர்.

அனால் இந்த உவமைகள் எப்படியுள்ளன பாருங்கள்..

யானைத் தந்தம் போல
பிறை நிலா

வெட்டி எறிந்த நகம் போல
பிறை நிலா

அறுத்தெடுத்த பூசணிக்காய்
கீற்று போல
பிறை நிலா

இப்படி சொன்னதுடன் நிற்கவில்லை கவிதைகள்

ஒரு கவிஞர் சொல்கிறார்..

பிறை நிலவாய் இருந்தாலும் முழு நிலவின் உரு மங்கலாகத் தெரியும் அல்லவா? அந்நிலவை குழந்தையாகவும்..வானத்தை துணியாகவும்..குழந்தை வானத் துணியை ஈரம் பண்ணுகிறதாம்..

பெய்யும் ஒளி நீரால்
வானத் துணியில்
ஒரு வட்டமாய் ஈரம் பாயும்
                -என்கிறார்..

யார் என்ன சொன்னாலும்..எப்படி ஒப்பிட்டாலும்..தாய் மனமோ..

அந்நிலவை தன் உறவாய்..தம்பியாய் நினைக்கிறாள்..ஆகவே தான் தன் குழந்தைக்கு அந்த அம்புலிமாமாவைக் காட்டி அழைத்து சோறூட்டுகிறாள்.

Monday, March 16, 2015

இனிக்கும் தமிழ்- 20




இதயத்தில் காதலனைவரச்செய்வது கண்களே ஆகும்..ஆகவே தான் கவிகளும் இதயத்தின் வாயில் கண்கள் என்கிறார்கள்.

காதல் தோல்வியுற்ற பெண்..'என் கண்கள் செய்த பாவம் உன்னைக் கண்டது' என்கிறாள்.

காதல் தோன்ற முதல் கருவியாய் இருப்பது கண்களே.
.
அதையே வள்ளுவரும் ஒரு குறளில்..'கண்டபின் நீங்குமென் மென் தோள் பசப்பு' என்கிறார்.

அதாவது காதலனைக் கண்கள் காண முடியாததால் அவள் தோள்களில் பசலை நோய் படிகிறதாம்..கண்கள் அவனைக் கண்டுவிட்டால் அது மறைந்து விடுமாம்
.
ஆனால் அதே சமயம் பழி ஓரிடம்..பாவம் ஓரிடம் என்பார்கள்...
ஒருவன் ஏதேனும் தவறிழைத்து விட தண்டனையை வேறொரு அப்பாவி அனுபவிப்பான்..
அப்படிதான் கண்கள் செய்த பாவத்தை தோள்கள் அனுபவிக்கின்றன..இந்த முத்தொள்ளாயிரம் பாடலில்..

பாண்டிய மன்னன் நகர் வலம் வருகிறான்.அவனை ஒரு கன்னிப் பெண் காண்கிறாள்.உடன் அவன் மீது காதல் கொள்கிறாள்.அதன் காரணமாக பசலை படர்ந்தது அவள் உடல் முழுதும்.தன் உடலில் பசலைப் படரக் காரணம் தன் கண்களால் அவனைக் கண்டதால்தானே..ஆனால் ஒரு பாவமும் அறியா அவள் தோள்கள் அல்லவா தண்டனை பெற்றன.உண்மையில் தண்டனை பெற வேண்டியது கண்களல்லவா? இது எப்படியிருக்கிறது எனில் உழுத்தஞ் செடி வளர்ந்துள்ள வயலில் ஊரில் உள்ள கன்றுகள் நுழைந்து மேய்ந்து அழிக்க...ஆனால் அங்கிருந்த ஒன்றுமறியா கழுதையைப் பிடித்து காதை அறுத்து தண்டித்தது போல இருக்கிறதாம்.


உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்

கழுதை செவி அரிந்தாற்றால் - வழுதியைக்

கண்டநம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்

கொண்டன மன்னோ பசப்பு



  (முத்தொள்ளாயிரம் - பாண்டிய நாடு -60)
(இப்பாடலில் கண்களை..உர்க்கன்று ஆகவும்...பசலை படர்ந்த தோள்களை கழுதைக்கும் ஒப்பிட்டுள்ளார் கவிஞர்.)
முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளைக் காதலேயாகும்.

Wednesday, March 11, 2015

இனிக்கும் தமிழ்-19

கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்..

யாரைத் தூது அனுப்புவது...என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக் காரியத்தைத் திறம்படச் செய்வர் என அறியாது மனதில் குழப்பம்..

தன்னிடம் வேலை செய்யும் பெண்ணை அனுப்பலாமா..? வேண்டாம் அது நன்மை பயக்காது

தான் வளர்க்கும் கிளியைத் தூது அனுப்புவோமா? ஆனால்..அதுவும் தன் தூதுப் பணியை திறம்படச் செய்யாது..

தன் தோழியை அனுப்பலாம் என்றாலோ..அவள் சென்று திரும்ப நாளாகலாம்..உடன் செயல்பட முடியாது..

அவன் நினைவை நெஞ்சிலிருந்து அகற்றி..பசலை நோயிலிருந்து விடுபட்டு தெய்வ வழிபாட்டில் மனதை செலுத்தலாம் என்றாலும் அது தீதில் முடியலாம்..

சரி..இதற்கு என்ன தான் வழி...ஒரே வழி..

அவன் திரும்பும் வரை அவன் பெயரை எண்ணி..மகிழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும்..என எண்ணுகிறாள்..

இதைத்தான் காளமேகப் புலவரின் இப்பாடல் கூறுகிறது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

(அடிமைப்பெண் மூலம் அனுப்பும் தூது நன்மை பயக்காது..கிளியோ தூதுப் பணியில் திறம்பட செயலாற்றாது.தோழியின் தூதோ நாளைக் கடத்தும்..ஆகவே பூந்தளிர் போன்ற தேமல்கள் என் மேல் படராது தெய்வத்தை வழிப்பட்டுத் தொடர்தலும் தீதாகும்..தித்திப்பாய் இனிக்கும் அவன் பெயரை ஒதிக் கொண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை)

கண்ணதாசன் தான் தயாரித்த வானம்பாடி படத்திலும்..நாயகன்..நாயகிக்கான பாட்டுப் போட்டியில் இப்பாடலை வைத்திருப்பார்.

காளமேகம் பற்றி சொல்லிவிட்டு..வள்ளுவன் பற்றி சொல்லவில்லையெனில் எப்படி...

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

என்கிறார்...உள்ளத்திலேயே காதலர் குடியிருக்கையில்..நெஞ்சே வெளியே அவனை நினைத்து எவரிடம் தேடி அலைகிறாய்?

Tuesday, March 10, 2015

இனிக்கும் தமிழ் - 18



காதல்...இந்த மூன்று எழுத்துச் சொல்லிற்குத்தான் எவ்வளவு வலிமை..
இந்தச் சொல் கோழையையும் வீரனாக்கியுள்ளது..வீரனையும் கோழை ஆக்கியுள்ளது.
சாம்ராஜ்யத்தையும் உருவாக்கி இருக்கிறது..சாம்ராஜ்யத்தையும் அழித்திருக்கிறது.
காதல்வசப்பட்டவர்கள்..ஓருயிர் ஈருடல் எனச் சொல்லிக் கொள்வர்..அப்படியாயின் இருவரில் ஒருவர் உயிர்விட்டால் மற்ற உடல் உயிரின்றி எப்படியிருக்கும்?
காதலைனையோ..காதலியையோ பறிகொடுத்தபின் மற்றவரால் எப்படி இருக்க முடியும்?இதையே திருவள்ளுவர் சொல்கிறார்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து (1209)

நாம் ஒருவரே.வேறு வேறு அல்லர் எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாய் போய்க்கோண்டிருக்கிறது..எனக் காதலி சொல்வதாகச் சொல்கிறார்.

ஆனால் குறுந்தொகையிலோ, நெய்தல் திணையில் சிறைக்குடி ஆந்தையார் என்னும் புலவர்..தலைவன் பிரிந்ததும் என்னுயிரும் போய்விடுவது மேலானது எனத் தலைவி சொல்வதாகக் கூறுகிறார்.அதற்கு அவர் அன்றில் பறவையைக் கூறுகிறார்.அன்றில் பறவை ஒரு நீர்வாழ்ப் பறவை.ஆணும்,பெண்ணும் ஒன்றையொன்று விட்டுவிடாது இணைந்தே தண்ணீரில் வலம் வரும்.இரண்டுக்கும் இடையில் பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அதை நீண்ட காலப் பிரிவாய் எண்ணுமாம்.ஆகா..என்னவொரு அழகான சிந்தனை..

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய புன்மை நான் உயற்கே

குறுந்தொகை-57
சிறைக்குடி ஆந்தையார்
(காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழியிடம் கூறுவது)
நீர்வாழ்ப் பறவை அன்றில் , ஆணும்,பெண்ணுமாக ஒன்றை ஒன்று பிரியாமல் வாழ்வன.தமக்கிடையே பூ ஒன்று இடைபட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அந்தப் பிரிவை ஓர் ஆண்டு கால அளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன.அந்தப் பறவைகள் போல ஓருயிர் ஈருடலாக நானும், தலைவனும் வாழ்கிறோம்.தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓர் உடலில் வாழும் இழிவு ஏற்படும்.அதற்குத் தலைவன் பிரிந்த உடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.

Monday, March 9, 2015

இனிக்கும் தமிழ்-17



நண்பர் ஒருவர் நம்மை 5 மணிக்கு சந்திப்பதாகச் சொல்கிறார்..ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச..ஆனால் 5-15 ஆகியும் அவர் வரவில்லை..பின் அவர் வருகிறார்.உடன் நாம் என்ன சொல்வோம்,,"ஏன் 15 மணித்துளி தாமதம்..ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகமாய் கழிந்தது' என்கிறோம்..

எதையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கையில்.. நேரம் போகாது..கடிகாரம் மெல்ல ஓடுவது போல இருக்கும்..

காதலன் காதலியை 6 மணிக்கு கடற்கரையில் சந்திப்பதாகக் கூறுகிறான்..காதலி வந்து வழக்கமான இடத்தில் அமர்கிறாள்.காதலன் வரக் காணோம். போவோர்,வருவோர் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்துப் போகிறார்கள்...அவளுக்கு சங்கடமாய் இருக்கிறது..காதலன் 6-10க்கு வருகிறான்.."சாரி..டியர்..டிராஃபிக் அதிகம்..அதுதான்..'என்கிறான்..

காதலிக்கு கோபம் வருகிறது,,'உங்களுக்கென்ன ஏதோ ஒரு சாக்கு..ஆனால் இங்கு காத்திருக்கும் எனக்கல்லவா..தர்மசங்கடம்..போவோர் வருவோர் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை..10 நிமிடங்கள் கடப்பது பத்து மணிநேரம் கடந்தாற் போல் இருக்கிறது' என அவனிடம் ஊடல் கொள்கிறாள்

இது இன்று..நேற்றல்ல..அன்றிலிருந்து எப்போதும் நடப்பதுதான்..என்பதை குறுந்தொகையில் இந்த பாடல் மூலம் புலப்படுகிறது.

தலைவன் மறுநாள் காலை வருவதாக முதல்நாள் செய்தி வருகிறது.பகல் நேரத்தைக் கூட அவள் கடந்து விட்டாள்..ஆனல் இரவைக் கடப்பது என்பது கடலைக் கடப்பதைவிட பெரிதாக இருக்கும் போலிருக்கிறதாம்..என் உயிர் போவதற்குள்..'கடந்து விட முடியுமா?' என்கிறாள்.



எல்லை கழிய முல்லை மலர

கதிர்சினந் தணிந்த கையறு மாலை

உயிர்வரம்பு ஆக நீந்தின மாயின்

எவன் கொல்? வாழி தோழி!

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!!



-கங்குல வெள்ளத்தார் - முல்லைத் திணை-387

பகலின் எல்லை முடிந்து..முல்லைப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்.சூரியனின் சினம் தணிந்து வரும் இரவு நேரம்.இதை என் உயிர் போவதற்கு முன்னால் நீந்தி கடந்து விட முடியுமா? தோழி என்கிறாள்.இரவு வெள்ளம் கடலை விட பெரிதாக இருக்கிறதாம்..

அதாவது தலைவன் வரும் முன்னர் இரவை கடப்பது ..இரவு நீண்டுக் கொண்டேப் போகிறதாம்..அதற்குள் அவள் உயிர் போய்விடுமா? என்கிறாள்.

காத்திருப்பது சுகம் என்றாலும்..காத்திருக்கும் நேரம் நீண்டுக் கொண்டிருந்தால்..

அந்த துயரத்தின் வெளிபாட்டையே இந்த குறுந்தொகை பாடல் சொல்கிறது.

கங்குல் வெள்ளம்.என்பது .இரவு வெள்ளம்..

இப்பாடலை எழுதியவர் அதனால் கங்குல வெள்ளத்தார் எனப்பட்டார்.

Friday, March 6, 2015

இனிக்கும் தமிழ்-16




காதலன்..காதலி..ஒரு மாலை நேரம்....அருவி சலசலத்து ஓடும் மனத்திற்கு ரம்மியமான சூழலில் சந்திக்கிறார்கள்..காதலில் மூழ்கியிருக்கும் வேளையில் ..உணர்ச்சி வசப்பட்டு..உடலுறவு கொண்டு விடுகிறார்கள்.சாதாரணமாக காதலர்களுக்கு நிலவு சாட்சியாக அமைவதுண்டு.இங்கு அதுவும் இல்லை.

காதலன் பிரிந்து செல்கிறான்..ஆனால் அவளோ தவறு செய்து விட்டதாக நினைக்கிறாள்.நாளைக்கு ஏதேனும் விரும்பத்தகாதது நடந்தால் சாட்சி சொல்லக் கூட யாரும் இல்லை.இழப்பின் வெளிப்பாடை
குறிஞ்சி நிலப் பெண் பாடுவது போல அமைந்துள்ளது இப்பாடல்.

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
(கபிலர் - குறுந்தொகை 25)


தவறு நடந்து விட்டது..அப்போது யாரும் இல்லை அந்தத் திருடன் (காதலன்) மட்டும் தான் இருந்தான்.நாளை நான் இல்லை என அவன் பொய் உரைத்தால் நான் என்ன செய்வேன்.நாங்கள் கூடிய போது தினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன் ஆரல் மீனுக்காக ஓடும் நீரில் காத்திருந்த கொக்கு மட்டுமே இருந்தது என்கிறாள். கொக்கு மட்டுமே சாட்சியாம்.

இப்பாடல் குறுந்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்.

Wednesday, March 4, 2015

இனிக்கும் தமிழ் - 15



கவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.

அத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.

அவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..

அத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..

ஆயின் என்ன விந்தை? உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன? இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.

பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன
பக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..
உச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை
உயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..
(மலரும் மாலையும்)

அடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகோ ளவே
பண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்
பக்குவம் ஏதடியோ
(மலரும் மாலையும்)

Tuesday, March 3, 2015

இனிக்கும் தமிழ்-14

காளமேகப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ மூன்று அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

Sunday, March 1, 2015

இனிக்கும் தமிழ்-13



சாதாரணமாக புலவர்கள் பொன் வேண்டி அரசனைப் புகழ்ந்து பாடுவர்.

அப்படி, நமது 23ஆம் புலிகேசி போன்ற ஒரு அரசன் மீது புலவர் ஒருவர் பொய்யாகப் புகழ் பாட..அரசனோ கோபமுற்றானாம்.

புலவர் பாடிய பாடல்-

சீருலா விய காமதேனுவே! தாருவே

சிந்தா மணிக்கு நிகரே

செப்புவசனத்து அரிச் சந்திரனே!

பாடலைக் கேட்ட மன்னன் கோபமடைந்து சொல்லியவை -

ஆரை நீ மாடுகல் மரம் என்றுரைத்தனை?

அலால் அரிச்சந்திரன் என்றே

அடாதசொற் கூறினை? யார்க்கடிமை யாயினேன்

யார் கையில் பெண்டு விற்றேன்?

தீருமோ இந்த வசை?

பிறகு..புலவர் ஏன் அங்கு நிற்கிறார்.பிடித்தார் ஓட்டம்.

Friday, February 27, 2015

இனிக்கும் தமிழ்-12



பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

(கவியரசு வைரமுத்துவின் 'நிலத்தை ஜெயித்த விதை' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ள வைர வரிகள் மேலே குறிப்பிட்டுள்ளவை)

Wednesday, February 25, 2015

இனிக்கும் தமிழ்-11




நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..

நம் எண்ணங்கள் எள்ளி நகைக்கப்படுகின்றன..

இந்நிலையில் நாம் என்ன செய்வோம்...

ஒன்று நம்மை புரியாதவர்களிடமிருந்து பிரிவோம்..

அல்லது..இவர்கள் எப்படிப் போனால் என்ன..நம்மை விரும்புபவர்களும் இருக்கிறார்களே..என மகிழ்வோம்..

அல்லது..இவர்களிடமிடுந்து விலகி..இவர்கள் கண் காணா இடத்திற்கு செல்வோம்..

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது.சோழ மன்னனிடம் ஏற்பட்ட சிறு பிணக்கு காரணமாய்..அவனால் அவமானப் படுத்தப்பட்டு..அந்த நாட்டை விட்டே போக எண்ணிய கம்பன்..மன்னனைப் பார்த்து..கீழ் கண்ட பாடலைப் பாடுகிறான்..

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதுவோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு



நீயும் ஒரு மன்னனா..இந்த நாடு உனக்கு சொந்தமா..நீ இருக்கிறாய் என்ற எண்ணத்திலா நான் தமிழ் பாடும் கவிஞன் ஆனேன்..கவிஞனான என்னை எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்நாட்டு மன்னர்கள் விரும்பி வரவேற்பார்கள்..எப்படி..ஒரு குரங்கை..மரத்தின் சிறு கிளையும் தாங்குகிறதோ..அதுபோல மன்னர்கள் என்னை தாங்குவர்..என்கிறான்.
..


இதையே ஔவையார் மூதுரையில் இப்படிச் சொல்கிறார்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

ஒரு நாட்டு மன்னன், கல்வி அறிவு படைத்தவன்..இவர்களில் யார் சிறந்தவன் என்று பார்த்தால்..கற்றவனே சிறந்தவன்..ஒரு நாட்டு மன்னனுக்கு அவன் நாட்டில்தான் மதிப்பு, சிறப்பு..அந்நாட்டை விட்டு வெளியேறினால்..மன்னன் சாதாரணமானவன்.ஆனால்..கல்வி அறிவாளிக்கு,அவன் எந்த நாட்டில் இருந்தாலும், அங்கு எந்த இடத்திற்குச் சென்றாலும் சிறப்புடையவனாகக் கருதப் படுவான்

Tuesday, February 24, 2015

இனிக்கும் தமிழ் - 10



வள்ளுவனின் சொல் விளையாட்டுகளை கீழ்கண்ட குறள்களில் இந்த இடுகையில் காணலாம்..
ஆற்றுதல் என்னும் சொல்லை வைத்து ஈகை அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக அவர் சொல்வது என்ன பார்க்கலாம்.

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

பசியைப் பொறுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறந்தது என அதைக் கடைப்பிடிப்பதைவிடப் பசியோடிருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

அடுத்து..ஒருவர் மீது ஏற்படும் பழியை விடக் கொடுமையானது..அவர் வாழ்வில் வேறேதும் இருக்க முடியாது.புகழ் அதிகாரத்தில் இதையே வசை,இசை,வாழ்வார் போன்ற சொற்களால் விளையாடியுள்ளார்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பழி உண்டாகாமல் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை எனப்படும்.புகழ் இல்லாதவர் வாழ்வதும்,வாழாததும் ஒன்று போலத்தான்

தவம் அதிகாரத்தில் பத்தாவது குறள் இது.இலர்,பலர்.சிலர் என வள்ளுவனின் விளையாட்டு இக்குறளில்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும்..உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்..

அடுத்து அவனது சொல்விளையாட்டு..இறந்தார்,துறந்தார் என்பதை வைத்து.வெகுளாமை யில் கடைசி குறள்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற சினம் கொள்பவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள்.சினத்தை அறவே துறந்தவர் முற்றும் துறந்த துறவிக்கு ஒப்பாவர்.

Monday, February 23, 2015

இனிக்கும் தமிழ் -9



சிலேடைப் புலவர் காளமேகத்திடம் 'த' என்ற எழுத்து மட்டும் வருமாறு பாடல் ஒன்றைப் பாடச் சொல்ல அவர் பாடிய பாடல்



தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)

அடடா....பாடல் முழுதுமே இனிக்கிறதே

Sunday, February 22, 2015

இனிக்கும் தமிழ்-8



சாதாரணமாக காதலன் தன் மனம் கவர்ந்தவளைக் காணும் இடம் இன்று பெரும்பாலும் கடற்கரைகளே..
கடல் இல்லாத இடங்களில்..பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள். அவர்களுக்குத் தனிமை தேவைப்பட்டாலும்..இது போன்ற இடங்களுக்கு வருவோர் பெரும்பாலும்..தான், தன் துணை,தன் குடும்பம் தவிர வேறு பக்கங்களில் பார்வையை ஓட்டுவதில்லை.
காதலன் தன் காதலி எங்கு வருவாள்..அவளை எங்கு சந்தித்தால் உரையாடலாம் என்று தெரியாது அவளது நெருங்கிய தோழியிடம் கேட்கிறான்..'உன் நண்பியை எங்கு சந்திக்கலாம்..அவள் எங்கிருப்பாள்?' என்றெல்லாம்.
அந்தக் காதலியின் தோழி சற்று குறும்புக்காரியாய் இருப்பாள் போலிருக்கிறது..'நேரடியாக பதில் சொல்லாமல்..அவனை சற்று சுற்றியடிக்கக நினைக்கிறாள்..ஆகவே அவனுக்கான பதிலை ஒரு விடுகதையைப் போல சொல்கிறாள்.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுபவள் பெரும்பே தையே

ஊருக்கு அருகே பொய்கை உள்ளது.சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை (அருகே உள்ளது).அவ்வாற்றில் தன் இரையத் தேடும் நாரைகளைத் தவிர வேறு யாரும் வருவதில்லை (தனிமைப் பிரதேசம்)நாங்கள் எங்கள் கூந்தலுக்கு செங்கழுநீர் பூக்கள் பறிக்க அங்கு செல்வோம்.பெரும் பேதமைக் கொண்ட அவள் அங்கும் வருவாள்..என்கிறாள் தோழி.

அதாவது காதலி அந்த இடத்திலும். என உம் போட்டாலும்..அவள் அங்குதான் இவருக்காக காத்திருப்பாள் என பொருள் பட சொல்கிறாள்.ஆற்றங்கரைக்குச் சென்றால் அவளைக் காணலாம் என்ற பதிலை நேரடையாகச் சொல்லவில்லை.

இப்பாடல் குறுந்தொகையில் தோழிகூற்று (மருதம்)..113ஆம் பாடல்..ஆசிரியர்-மாதீர்த்தனார்)

Friday, February 20, 2015

இனிக்கும் தமிழ் - 7




அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தில் இன்பச்சுவைக்கு அளவே இல்லை.

திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக் காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் 'மங்கையர் கட்டழகில் மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென நினைத்துப் பார்த்து ஏறி தம் காதலியை அடையும் காதலர் எத்தனை பேர்?அவ்வாறிருக்க சீதையின் பேரழகில் மயங்கிய ராமன்..இந்தச் சிறு வில்லை மட்டுமா ஒடிப்பான்? ஏழுமலையையும் கொடுத்தாலும் பிடித்து, எடுத்து ஒடிப்பானே' என்கின்றனர்.

மூவுலகமும் செலுத்தும் ராவணனுக்குப் பண்டு
முத்தி கொடுக்கவந்த சித்திர வடிவைக்கண்டு
தேவியிவள் என்றாள் ராகவன் இந்தச் சின்ன
சிலையோ ஒடிப்பான் ஏழுமலையும் ஒடிப்பான் என்ன
-ராம நாடகம்

என்பது சீதையிடம் ராமன் கொண்ட காதலின் பெருமையைக் கவிஞர் சுவைபடத் தீட்டும் கவிச்சித்திரமாகும்.

சீதை ராமனிடம் கொண்ட காதலையும் நாடகத்தமிழுக்கு ஏற்ப கவிராயர் சுவைப் படக் கூறுகிறார்.

ராமன் தன் சிற்றன்னையின் கட்டளையைத் தலைமேற்கொண்டு வனம் செல்ல ஆயத்தமாகிறான்.தனது பிரிவைத் தன் காதலி சீதைக்கு உணர்த்துகிறான்.

தலைவனைப் பிரிந்து தான் உயிர் வாழ இயலாத காதல் நிலையை...

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

-திருக்குறள்
பிரிந்துசெல்வதில்லை என்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல்..நீ போய்த்தான் தீரவேண்டுமாயின்..நீ திரும்பிவரும்போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்...என்கிறாள் திருக்குறள் தலைவி தன் தலைவனிடம் குறிப்பாக .

ஆனால் கவிராயரோ மேலும் ஒரு படி செல்கிறார்..

தான் தலைவனைப் பிரிந்து வாழ இயலாத காதல் மிகுதியை சீதை புலப்படுத்துவதுடன் மற்றொன்றும் கூறுகிறாள்..

என்னைப் பிரிந்துசெல்லத் துணிந்தீர்..ஆயின் நீர் பிரிந்து சென்று தங்கும் காட்டின் பெயரையேனும் எனக்குக் கூறிச் செல்லுங்கள்.நீர் பிரியின் நான் இறப்பது உறுதி.இறப்பின் மீண்டும் பிறப்பது உறுதி நீர் பிரிந்துறையும் காட்டின் பெயரை அறிவிப்பின் அதனை நினைத்துக் கொண்டே நான் இறக்க நேரும்.அப்படி பெயரை நினைத்துக் கொண்டே இறந்தால் அதே காட்டில் மீண்டும் பிறந்து உங்களை அடைந்து மகிழ்வேன்..என்கிறாள்

நாடிநீர் போயிருக்கும் வனத்தின்பேர்
சொல்லவேணும் - அதை
நான்நினைத்துக் கொண்டிறந்தால்
அங்கே பிறக்க லாங்காணும்
-ராமநாடகம்

என்பது கவிராயர் படைத்த சீதையின் காதல்மொழி..

Thursday, February 19, 2015

இனிக்கும் தமிழ்-6


ஒருவரிடம் நட்பு கொண்டு விட்டோம்..ஆனால் நாளாக ஆக அந்த நண்பரின் சுயரூபம் தெரிகிறது.ஆனால் அந்த நட்பை முறித்துக் கொள்ள இயலாதவாறு ஒரு நிலையை உருவாக்கி விட்டான் அந்த நண்பன்.இப்போது அவனை விட்டு விலகினால் உங்களுக்கு ஆபத்து..

இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது..?

ஒருவரிடம் நட்பு பாராட்டுமுன் அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்..அதைச் செய்யாமல் நண்பனாகி விட்டால் அது தீய நட்பாக அமையும் வாய்ப்பும் இருக்கிறது.

இதைத்தான் வள்ளுவர் சொல்விளையாட்டுடன் நட்பாராய்தல் அதிகாரத்தில் முதல் குறளாகச் சொல்லியுள்ளார்.



நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு

என்கிறார்..ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும் என்பதே இதன் பொருள்.

புல்லறிவாண்மை அதிகாரத்தில் ஒன்பதாம் குறளைப் பார்ப்போம்..

ஒரு முட்டாள் இருக்கிறான்.அவனுக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு அறிந்தோரிடம், தனக்கும் எல்லாம் தெரியும் போல நடந்துக் கொள்கிறான்.அவனை அறிவுடையோன் ஒருவன் அறிவுடையவனாக்க முயற்சிக்கிறான்..அந்த சமயத்தில் அறிவுடையோனும், அறிவற்றவனாகவே தன்னை ஆளாக்கிக் கொள்ள நேரிடும்..

உதாரணத்திற்கு..சேறும் சகதியுமான இடத்தில்..தண்ணீர் தேங்குமாயின் அதுவும் சேற்றின் நிறம் அடையும்..(செம்புலப்பெயல் நீர்),இதில் சேறு அறிவற்றவன்..தண்ணீர்.. அறிவுடையவன்.இப்போது இந்த குறளைப் படியுங்கள்..



காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு



காணாதான்,காணான்,காணாதான்,கண்டானாம்,கண்டவாறு..அடடா..சொல்லழகும்,சொல் விளையாட்டும் ..இந்த ஒன்றே முக்கால் அடியில்..இது வள்ளுவனன்றி வேறு யாரால் முடியும்!!!!

இதன் பொருள்- அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்.அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

அடுத்து...

நமக்கு நெருங்கிய உறவினர்..அவர் நம்மிடம் மிகவும் அருமையாக உறவுடன் இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், மனதிற்குள்..நம்மைப் பற்றி வன்மம் பாராட்டுகிறார்..இப்படியிருப்பதால் நமக்கு என்றேனும் ஒருநாள் அவரால் கேடு உண்டாகும்..இதற்கு உதாரணம் சொல்வதானால்...இப்போதெல்லாம் ஒரு ரூபாய்க்கு தண்ணீர் பாக்கெட் கிடைக்கிறது.வெயிலில் அலையும் நாம் தாகத்திற்கு அதை வாங்கி அருந்துகிறோம்.அது பார்க்க தெளிவாக, இனிமையாகத் தெரிந்தாலும்..அந்த நீர் சாக்கடைக்கு அருகில் இருக்கும் குழாய் ஒன்றிலிருந்து அப்படியே பிடித்து அடைக்கப் பட்ட கிருமிகள் அதிகம் உள்ள நீர்.இதை அருந்துவதால் தீமைதான் உடலுக்கு உண்டாகும்.அதே போன்றதுதான் சுற்றத்தினர் உட்பகையும்..தீங்கு விளைவிக்கும்.

இதையே உட்பகை என்னும் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்கிறார்...

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்



நீர் என இரு இடங்களிலும், இன்னா என்பது நான்கு இடத்திலும் சொல்லி சொல் விளையாட்டு விளையாடுகிறார் வள்ளுவர்.

இதன் பொருள்- இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும் கூடக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்..

இனிக்கும் தமிழ் - 5



சாதாரணமாக கவிஞர்கள் அந்த நாளில் அரசனைப் பாடிப் பொன்னும் பொருளும் பெறுவர்.வறுமையில் அவர்கள் வாடினாலும், அவர்களின் தமிழில் பாடப்படுபவரைப் பற்றி நக்கலும், கிண்டலும் கூட இருக்கும்.அப்படி, பாடி பரிசு பெற எண்ணி அரசன் ஒருவனை இராமசந்திர கவிராயர் பாடுகிறார்.(இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்).  பாடி முடித்ததும் அந்த அரசன் பரிசு ஏதும் தரவில்லை.அந்த மனச் சலிப்பை இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

கல்லாத வொருவனைநான் கற்றா யென்றேன்
காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்
பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்
போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்
மல்லாரும் புயனென்றேன் சூம்பற் றோளை
வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்
இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே !



(கல்லாத ஒருவனை நான் மெத்தப்படித்த மேதை என்றேன்;
காட்டை அழைத்துச் செழிக்கும் ஒருவனை நாடாளும் மன்னனே என்றேன் ;
தீயவனை நல்லான் என்று புகழ்ந்துரைத்தேன் ;
போர்க்களத்தையே பார்த்திராத கோழையை வேங்கையை ஒத்த வீரன் என்றேன்;
சூம்பிய தோள்களைக் கொண்ட நோஞ்சானை மல்யுத்தத்துக்கு ஏற்ற திடம் கொண்ட தோளன் என்றேன்;
எச்சில கையால் காகம் ஓட்டாதவனை வள்ளல் என்றேன்;
இப்படி இல்லாததைச் சொல்லி புகழ்ந்த எனக்கு, அவன் இல்லை எனச் சொல்லி விட்டான்).

Wednesday, February 18, 2015

இனிக்கும் தமிழ் - 4



சங்கத் தமிழ்ப் பாடல்கள்...ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை...இலக்கியச் சுவை மிக்கவை.அவற்றில் ஒன்று கம்பர் எழுதியது.இந்த கம்பர் ராமாயணம் பாடியவரா எனத் தெரியவில்லை.

பாடலை ரசியுங்கள்..

பொன்னி வளநாட்டில் மாத்தத்தன் என்கிற அழகன். அவனது அழகில் மயங்கி, அவன் மீது காதலுற்ற காரணத்தால் மங்கையர்தம் மேனி மெலிய, அவர்கள் அணிந்திருந்த வளையல் கழன்றனவாம். இதை, (சொற்பொருட் பின்வருநிலை அணி எனும் இலக்கணப்படி) "வளை" எனும் வார்த்தையை வைத்துக்கொண்டு விளையாடுகிறார் கவிஞர்.

"இருந்தவளை போனவளை என்னை அவளைரார்
 பொருந்த வளைபறித்துப் போனான் - பெருந்தவளை
 பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
 மாத்தத்தன் வீதியில் வந்து."


சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் வளையிட்டு என்னவளை காதல் சொன்னவளை என்கிற கண்ணதாசன் பாடல் ஞாபகம் வருகிறதா?