Tuesday, November 5, 2019

இனிக்கும் தமிழ் - 102

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
இதன் பொருள் :
திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். ..
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய விளக்கம்
 
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடைய
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்