Thursday, September 5, 2019

திரு அருட்பா - கேட்பதற்கு முன்னே பாவ மன்னிப்பு

...

நாம் ஏதோ பாவம் செய்துவிட்டோம்.பின்னர் நம் தவறினை எண்ணி வருந்தி, அதற்கு இறைவனிடம் மனதார மன்னிப்புக் கேட்க எண்ணுகின்றோம்.

அப்படிப்பட்ட நிலையில் நாம் மன்னிப்புக் கேட்கும் முன்னரே இறைவன் நம்மை மன்னித்துவிடுவானாம்...

வள்ளலார் சொன்னதைப் பாருங்கள்..

இறைவனிடம் சென்று, தான் செய்த பாவங்களை சொல்லி, "மன்னித்துக் கொள், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்" என்று சொல்வதர்க்கு முன்னேயே அவன் மன்னித்தது மட்டும் அல்ல...கருணையும் பொழிந்தான்...அதற்கு என்ன கை மாறு செய்வேன் என்று உருகுகிறார் வள்ளலார்....

பாடல் 

தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த
கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே

பொருள் 

தனியே கிடந்து = தனியாகக் கிடந்து 

மனங்கலங்கித் = மனம் கலங்கி

தளர்ந்து தளர்ந்து = மீண்டும் மீண்டும் தளர்ந்து 


சகத்தினிடை = இந்த உலகத்தில்

இனியே துறுமோ = இனி ஏதுருமோ = இனி என்ன நிகழுமோ

என்செய்வேன் = என்ன செய்வேன்

எந்தாய் = என் தாய் போன்றவனே

எனது பிழைகுறித்து = எனது குற்றங்களை குறித்து

முனியேல் = கோவித்துக் கொள்ளாதே

எனநான் = என்று நான்

மொழிவதற்கு முன்னே = சொல்வதற்கு முன்னே

கருணை அமுதளித்த = உன் கருணை என்ற அமுது அளித்த 

கனியே = கனியே

கரும்பே = கரும்பே

நின்தனக்குக் = உனக்கு

கைம்மா றேது கொடுப்பேனே = கை மாறாக என்ன தருவேன் ? (ஒன்றும் தர முடியாது என்பது பொருள்) 

No comments:

Post a Comment