Wednesday, September 4, 2019

இனிக்கும் தமிழ்



சித்தத் தொகை திருக்குறுந்தொகை.தேவாரத் திருப்பதிங்களில் மிகவும் அதிகமான (முப்பது) பாடல்களைக் கொண்ட பெருமை உடையது இந்த திருப்பதிகம். தன்னைப் பற்றி சிந்திக்கும் மனதினை உடைய அடியார்கள் என்று இந்த பதிகம் தொடங்கப் பெறுவதால் சித்தக் குறுந்தொகை என்ற பெயர் வந்தது. இங்கே சித்தம் என்ற சொல் மனதினை குறிக்கின்றது. இந்த பாடலின் மற்றொரு சிறப்பு, பன்னிரண்டு உயிரெழுத்துகள், ஆய்த எழுத்து, மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துகள் ஒவ்வொரு பாடலிலும் முதலில் வரும் வண்ணம் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் தமிழ் மொழியின் இலக்கண வரம்பினை மீறாத வண்ணம் இந்த பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ் இலக்கண விதியின் படி எந்த சொல்லிலும் முதலில் வாராத ட, ண, ய. ழ, ற,. ன ஆகிய எழுத்துக்களை, அகர இகரங்களை இணைத்து சொற்களாக்கி பாடலைத் துவக்கியுள்ளார்.

அதே போல்..

"ஙப் போல் வளை , 

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார் இப்பதிகத்தில்.

பெருமானின் திருவருளினால், நந்தி படுத்திருக்கும் நிலை ங எழுத்தினை ஒத்திருக்கும் தன்மையினை அப்பர் பிரான் உணர்ந்தார் போலும். எங்கும் எதிலும் பெருமானையோ பெருமானைச் சார்ந்த பொருட்களையும் காணும் அப்பர் பிரானுக்கு ங என்ற எழுத்தின் அமைப்பு, நந்தி படுத்திருக்கும் நிலையினை உணர்த்தவே, அந்த எழுத்தினையே நந்தியம்பெருமானாக உருவகித்து, நந்திக் கொடியினை உடைய பெருமான் என்பதற்கு பதிலாக ஙகர வெல்கொடியான் என்று பெருமானை அழைக்கின்றார்.

ஙகர வெல் கொடியானொடு நன்னெஞ்சே
       நுகர நீ உனைக்கொண்டு உயப் போக்குறில்
       மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
       புகரில் சேவடியே புகலாகுமே
விளக்கம்:
வெல்கொடி=எவரையும் வெல்லும் கொடி; ஙகர=ங எழுத்தினைப் போன்று படுத்த  நிலையில் இருக்கும் இடபம்; மகர வெல்கொடி மைந்தன்=மீனைத் தனது கொடியின் சின்னமாக வைத்துள்ள மன்மதன்; பெருமானிடம் மட்டுமே தோல்வி கண்ட மன்மதன், ஏனையோரிடம் வெற்றி பெற்றமையால் வெல்கொடி என்று மன்மதனின் கொடியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

நல்ல நெஞ்சமே, ங என்ற எழுத்தினை நினைவூட்டும் வகையில் படுத்திருக்கும் இடபத்தின் சித்திரத்தைத் தனது கொடியினில் ஏந்திய பெருமானின் நினைவுகளை அனுபவித்து உனது வாழ்க்கையை உய்யும் வகையில் செலுத்த வேண்டும் என்று நீ விரும்புவாயாகில், முற்றும் துறந்தவர்களையும் காமத்தில் ஆழ்த்தி வெல்லும் திறமை உடையவனும் மீன் கொடியினை உடையவனும் ஆகிய மன்மதனை விழித்து எரித்த சிவபெருமானது குற்றமற்ற திருவடிகளே புகலிடம் என்று கொள்வாயாக

No comments:

Post a Comment