கம்ப இராமாயணம்
இரவு..
இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது.
சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை.
அது போல
இராமா,
இதுவரை எப்படியோ தெரியாது,
ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன்.
எங்கே ?
இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.
மிக மிக அருமையான பாடல், ஆழமான பாடலும் கூட....
‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’
இவ்வண்ணம் = இந்த மாதிரி
நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்த பின். அகலிகை சாப விமோசனம் பெற்ற பின்
இனி. = இனிமேல்
இந்த உலகுக்கு எல்லாம் = இந்த உலகத்திற்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி = உய்யும் வழி அன்றி
மற்று ஓர் = வேறு ஒரு
துயர் வண்ணம் = துயரங்கள்
உறுவது உண்டோ? = நேர்வது உண்டோ? (கிடையாது)
மை வண்ணத்து = மை போன்ற கரிய நிறம் கொண்ட
அரக்கி =அரக்கி (தாடகை)
போரில்.= சண்டையில்
மழை வண்ணத்து அண்ணலே! = மழை முகில் போன்ற கரிய நிறம் கொண்ட அண்ணலே
உன் = உன்னுடைய
கை வண்ணம் = கை வண்ணமாகிய வில்லாற்றலை
அங்குக் கண்டேன் =அங்கு கண்டேன்
கால் வண்ணம் = சாப விமோசனம் தரும் திருவடியின் வண்ணத்தை
இங்குக் கண்டேன் = இங்கு கண்டேன்
இதில் என்ன ஆழம் என்று கேட்கறீர்களா? எழுதியவன் கம்பன்...
பாடலில் எத்தனை வண்ணம் ?
இவ்வண்ணம்
நிகழ்ந்த வண்ணம்
உய்வண்ணம்
துயர் வண்ணம்
மை வண்ணம்
மழை வண்ணம்
கை வண்ணம்
கால் வண்ணம்
மொத்தம் எட்டு வண்ணம். இறைவனை எண்குணத்தான் (எட்டு குணம் உள்ளவன் என்று சொல்வது மரபு).
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
என்பார் வள்ளுவர்.
அது என்ன கை வண்ணம், கால் வண்ணம் ?
ஒருவர் மேல் அன்பு செலுத்தும் போது நாம் கையை உபயோகப் படுத்துகிறோம்...அணைப்பது, கட்டி கொள்வது, கையேடு கை பின்னிகொள்வது போன்ற அன்பின் வெளிப்பாடுகளாய்
ஒருவர் மேலோ அல்லது ஒன்றன் மேலோ கோவமோ வெறுப்போ வரும்போது அதை காலால் எட்டி உதைக்கிறோம்
அன்புக்கு கை, வெறுப்புக்கு கால்.
ஆனால் இராமனோ, கோவம் கொண்ட அரக்கியின் மேல் கை வண்ணம் காண்பித்தான், அன்பு கொண்ட அகலிகை மேல் கால் வண்ணம் காட்டினான்.
விஸ்வாமித்திரன் ஆச்சரியப் படுகிறான்.
வண்ணம் வண்ணம் என்று சொல்லிக் கொண்டு வந்த கம்பன், அரக்கியயையும் இராமனையும் வண்ணமயமாகவே வருணிக்கிறான்.
மை வண்ணத்து அரக்கி, மழை வண்ணத்து அண்ணலே என்று.
பொய், சூது, கொலை போன்ற கெட்ட குணங்களால் நிறைந்ததால் மை போன்ற கரிய நிறத்து அரக்கி.
பிறருக்கு கொடுப்பதற்காகவே நீர் கொண்டு கருத்ததால் மழை மேகம் கருக்கிறது.. எனவே அந்த கரு மேகம் இராமனின் கருமைக்கு உதாரணம்