Sunday, May 31, 2015

இனிக்கும் தமிழ் -35 காளமேகத்தின் சிலேடைப் பாடல்-5



பாம்பும் எள்ளும்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது


பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும். படமெடுத்து ஆடும்போதே 'உச்' என்று இரையும். பாம்பாட்டி பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும். ஓடிப்போய் மண்ணால் செய்த மண்டை ஓட்டில் சுருண்டு படுத்துக்கொண்டு பரபர என ஒலி வருமாறு அசையும். பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கு உண்டு.

எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும். செக்கில் ஆட்டப்படும்போது செக்கின் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும். நம் தலை மண்டைக்குள் ஓடிப் பரபர என்று தேய்க்கப்படும். பார்க்கப்போனால் அதற்குப் பிண்ணாக்கு உண்டு.

Friday, May 29, 2015

இனிக்கும் தமிழ்-34 காளமேகம் சிலேடைப் பாடல்கள்-4



பாம்பும் வாழைப்பழமும்

நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

பாம்பிடம் நஞ்சு இருக்கும். பாம்பு தன் தோலை உரிக்கும். சிவபெருமான் முடிமேல் இருக்கும். கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது.

வாழைப்பழம் நைந்துபோயிருக்கும். வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். கொடிய பசியோடு இருக்கும் ஒருவர் பல்லில் பட்டால் அப் பழம் மீண்டுவராது

Thursday, May 28, 2015

இனிக்கும் தமிழ்-33 காளமேகத்தின் சிலேடைப் பாடல்-3




வைக்கோலும் யானையும்

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம்.


வைக்கோல்
வாரிக் கள‌த்தடிக்கும் – அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் – அது பின் கோட்டைக்குள்ளே (ப‌ண்ட‌க‌ சாலை, Godown, Warehouse) சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் – பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்

மதயானை
வாரிக் கள‌த்தடிக்கும் – பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் – பின்னே பகையரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – இவ்வாறாக போர்க்களத்தில் சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்

(வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும். வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்.
யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.)

Wednesday, May 27, 2015

இனிக்கும் தமிழ்- 32 காளமேகம் சிலேடைப் பாடல் 2



ஆமணக்கு, யானை இரண்டையும் குறிக்கும் பாடல் இதோ-



முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை யாம்.

ஆமணக்கு, எண்ணெய் ஆட்டுதற்குரிய முத்துகளை உடையதாய் இருக்கும். காற்றில் அது தன் சிறிய கொம்புகளை அசைக்கும். தடித்த தண்டுகளையுடைய கிளைகளை ஏந்தி வளரும். முத்திருக்கும் காய்களைக் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்.
மால் யானையின் விளைந்த தந்தத்தின் முத்திருக்கும் என்பார்கள். அது அல்லாமமல் தந்தத்தின் அடிப்பாகத்தில் முத்துக்களால் ஆன மாலையை அழகுக்காகவும் கௌரவத்திற்காகவும் சுற்றிக் கட்டியிருப்பார்கள். அந்தத் தந்தத்தின் துணை கொண்டு பெரிய மரங்களைத் தூக்கிவரும் கொம்பசைக்கும். அந்தத் தந்தங்களை இங்கும் அங்குமாய் அசைத்த்படி ஆடிக்கொண்டே நிற்கும். நிமிர்ந்து நிற்கும் வாழைமரத்தின் பழுத்த குலைகளைச் சாய்த்து வீழ்த்திச் சாப்பிடும்.( இவ்வாறு, தேன் பொழியும் சோலைத் திருமலை ராயன் மலையில் ஆமணக்கும் யானை ஆகும்.)

Tuesday, May 26, 2015

இனிக்கும் தமிழ் -31

சிலேடைப் புலவர் காளமேகம், தென்னை மரத்தையும் ஒரு கணிகை எனக் கொள்ளலாம் என்கிறார் இப்பாடல் மூலம்.

என்ன ஒரு கற்பனை...பாருங்கள்

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்
கூறும் கணிகையென்றே கொள்.

பாரத் தலைவிரிக்கும் - தென்னை மரத்தின் ஓலைகள் எல்லாப் பக்கங்களும்
நீண்டு, விரிந்து இருக்கும். (கணிகைப் பெண்ணும் கூந்தலை விர்த்துத்
தொங்கவிட்டு அலங்காரம் செய்திருப்பாள்.) பன்னாடை மேல் சுற்றும் -
தென்னையில் பன்னாடை சுற்றிக் கொண்டிருக்கும். (அவளும் பலவண்ண ஆடைகளை
அணிந்திருப்பாள்.) சோர இளநீர் சுமந்திருக்கும் - தென்னோலைகளுக்குள்
மறைந்து இளநீர்க் குலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். (கணிகையும் இடைதளரும்
வகையில் இளநீர்போன்ற கொங்கைகளைச் சுமந்துகொண்டிருப்பாள்). ஏறி இறங்கவே
இன்பமாம் - தென்னையில் ஏறி இளநீர் பருகி இறங்குவது மிகவும் இன்பமாக
இருக்கும். (கணிகையும் அப்படித்தான்.) ( அதனால் தென்னை மரத்தையும் கணிகைப்
பெண்ணென்று கொள்ளலாம் என்பது பாடலின் பொருள்.)

Sunday, May 10, 2015

இனிக்கும் தமிழ் - 30

பேசுவது எளிது.அதையே உரைநடையாய் எழுதுவது அரிது.அந்த உரைநடையை இசையுடன் கூடிய கவிதையாக ஆக்குவது என்பது அதனெனினும் அரிது.பாமரர்களுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதுபவரே மக்கள் கவிஞர் எனப் போற்றப்படுபவர்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கவிஞர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்..தமிழகத்தில் பிறந்து..வளர்ந்த அருணாசலக் கவிராயர் ஆவார்.இவர் தன் வாழ்நாள் முழுதும் கம்ப ராமாயணம் படித்தும்,பாடியும்,சொற்பொழிவு ஆற்றியும் வந்தவர்.இவரது ராம நாடகத்தில் சூர்ப்பணகையின் காமவெறியை நகைச்சுவைக் கலந்துக் கூறுகிறார்.அதைப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் காதலுணர்வின் சிறப்பினைச் சீதையின் வாயிலாகவும்..காமவெறியின் இழிவினை சூர்ப்பணகையின் வாயிலாகவும் புலப்படுத்தியுள்ளார்.அவற்றையே காண்போர் சுவைக்க நாடகமாக்கினார் கவிராயர்.

ராமனின் அழகில் மயங்கி..பேரழகான வடிவொடு ராமர் முன் வருகிறாள் சூர்ப்பணகை.ராமர் மசியவில்லை.சரி..இளையோனையாவது மயக்கலாம் என லட்சுமணனிடம் வருகிறாள்.அவளை அறநெறியில் அகற்ற முடியா லட்சுமணன் மறநெறியைக் கையாண்டு அவளது மூக்கை அறுத்து துரத்துகின்றான்.மூக்கறுப்பட்டும்..காமம் அழியாமல் மீண்டும் ராமனிடம் வருகிறாள் சூர்ப்பணகை.அவனிடம் சொல்கிறாள்...

'உங்கள் தந்திரத்தை நான் தெரிந்துக் கொண்டேன்..கட்டழகுக் கன்னியான என்னை..வேறு எவரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவும்..மற்றவர் கண்ணேறு என் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும்..என் பேரழகை சற்றுக் குறைக்க தம்பியிடம் சொல்லி என் மூக்கை அரியச் செய்தீர்கள்.நீங்கள் என்னை விரும்புவது எனக்குத் தெரிகிறது.உங்கள் இளையக் காதலியான நான் மூத்தவளைவிட அழகானவள்.அதனால் சீதைக்குக் கோபம் வரும் என்பதால்..அவளது வாயை அடக்க நீர் செய்த தந்திரம் என் மூக்கை அறுத்தது..மேலும் சீதைக்கு இடை மிகவும் சிறியது.அந்த குறை என்னிடம் இல்லை.அதனால் எனக்கும் ஒரு சிறு குறையை உண்டாக்கி..இருவரையும் சரிநிகர் சமானம் ஆக்கிவிட்டீர்கள்.சீதையைப்போல் இடைக் குறையை எனக்கு உண்டாக்க முடியாது.இடையைக் குறைப்பதை விட மூக்கைக் குறைப்பது எளிது என இக்காரியம் செய்து விட்டீர்.இதன் மூலம் நீங்கள் என் மீது கொண்டுள்ள காதல் புரிகிறது.' என காதற்சுவை சொட்டச் சொட்டக் காமவெறியுடன் சொல்கிறாள் சூர்ப்பணகை.

என் உருவினில் கொஞ்கம் கொய்தீர்
எனக்கென்ன தாழ்ச்சி நீர் செய்தீர்?

அன்னியளாக என்னைப் பிரிய விடாமல்- என்
அழகு கண்டொருவர் கண்ணேறு படாமல்
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்

இடுப்பு சீதைக்குக் கொஞ்சம்
மூக்கிவ ளுக்குக் கொஞ்சம்
என்றெவர்க்கும் சரிக் கட்டவோ - எண்ணி
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்..

- கவிராயரின் ராம நாடகம்

என்கிறாள் இன்மொழியுடன் சூர்ப்பணகை.சூர்ப்பணகையின் காமவெறியாகிய காதற்போலியை நகைச்சுவைக் கலந்து நாடகமாக்கினார் கவிராயர்.

அடுத்த பதிவில் சீதையின் காதலுணர்வை எப்படிக் காட்டியுள்ளார் எனப் பார்ப்போம்.

Monday, May 4, 2015

இனிக்கும் தமிழ் -29



நம் பெரியவர்கள் நல்லொழுக்கத்துடன் இரு என அறிவுரை சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

திருவள்ளுவரும் ஒழுக்கம் உடைமை என்ற பெயரில் ஒரு அதிகாரமே வைத்துள்ளார்.அதில் ஒரு குறளில், உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் என்கிறார்.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

ஆமாம்...இந்த ஒழுக்கம் என்பது என்ன? அதிலும் வகைகள் இருக்கிறதா..நல்ல ஒழுக்கத்துடன் திகழ தேவையாவவை என்ன...இது பற்றி ஆசாரக் கோவை சொல்வதென்ன...பார்ப்போம்


நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
      டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ
      டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை
      நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
      சொல்லிய ஆசார வித்து

 தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமையும்,  பொறுமையும்,  இன்சொல்லும்,  எல்லா உயிர்க்கும்  துன்பந்தருபவற்றை  செய்யாதிருத்தலும், கல்வியும், பிறருக்கு உதவிடம் இனிய வழக்கமும், மிக,  அறிதலும், அறிவு உடைமையும்,  நல்ல இயல்புள்ளவர்களுடன், நட்புச் செய்தலும்,  என்ற இவ்வெட்டு வகையும்,  அறிஞர்களாற் சொல்லப்பட்ட,  ஒழுக்கங்கட்குக் காரணங்களாகும்.