எனது எண்ணங்கள்-
"தமிழ்"
தங்கச்சுரங்கம் அது
அதனுள்...
எத்தனை...எத்தனை..அழகான..அறிவுத் தாகம் தீர இலக்கியங்கள்..கவிதைகள்..என நம் முன்னோர் தமிழ் வாழ எழுதிச் சென்றுள்ளனர்!
அத்தனையும் ஒரு கமண்டலத்துள் அடக்க அகத்தியனா நாம்?
ஆனாலும், அக்கடலில் மூழ்கி..நம்மால் எடுக்க முடிந்த முத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசை.
அதுவே இவ் வலைப்பூ துவங்கக் காரணம்.
இனி..வாராவாரம் வாருங்கள்..தமிழைச் சுவையுங்கள்.
முதலில்....
"தமிழ்"..இதையேப் பாருங்கள்..
வல்லினத்தில் ஓர் எழுத்து - த
மெல்லினத்தில் ஓர் எழுத்து-மி (ம)
இடையினத்தில் ஓர் எழுத்து-ழ் (ழ)
எப்படி நம் தமிழ்
அடுத்து..பாருங்கள்...
இறைவனுக்கு தமிழில் இருப்பதைப் போன்று சொல் வேறு எம்மொழியிலும் இல்லை எனலாம்.
"கடவுள்"
கட...எல்லாவற்றையும் கடந்தவர்
உள்-எல்லாவற்றினுள்ளும் இருப்பவர்..
இப்படி அவ்வப்போது சிறு செய்திகளுடன்..தமிழ்ச் சுவை படைக்க உள்ளோம்.
முதலாவதாக :தமிழ்: பற்றி..பாரதிதாசனின் ஓர் கவிதை
தமிழுக்கும் அமுதென்று பேர்
ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
No comments:
Post a Comment