காளமேகப் புலவர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.இவர் பாடிய சிலேடைப் பாடல்களும்..நகைச்சுவைப் பாடல்களும் பல..'ஆசுகவி' எனப் போற்றப்பட்டவர்.தங்குத் தடையின்றி கொடுத்த பொருள்..ஈற்றடி என எல்லாவிதத்திலும் தனது புலமைத் திறத்தை வெளிப்படுத்தியவர்..
'க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலைப் பாடுமாறு ஒரு முறை காளமேகத்திடம் சொல்லப் பட்டது..உடன் அவர் பாடிய பாடல்..
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
இதற்கான அர்த்தம்..காக்கையானது பகலில் கூகை (ஆந்தை)யை வெல்ல முடியும்..கூகையானது இரவில் காக்கையை வெல்ல முடியும்..கோ (அரசன்) பகைவரிடமிருந்து தன் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும்..பகலில் காக்கையைப் போலவும் காக்க வேண்டும்..எதிரியின் பலத்தை அறிந்து..கொக்குக் காத்திருப்பதுப் போல தக்க நேரம் வரும்வரை காத்திருந்துத் தாக்க வேண்டும்..தகுதியற்ற காலத்தில் முயன்றால் அரசனுக்குக் கூட (கைக்கைக்காகா) கையாலாகாததாகிவிடும்.
காளமேகனைப் புகழ்கிறாயே..நான் ஒன்றே முக்கால் அடியில் இதைச் சொல்லியுள்ளேனே! என்கிறான் வள்ளுவன்
.
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்றுவிடும்..எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்..